திருகோணமலையில் மீனவர்கள் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்
குச்சவெளி கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 48 இலங்கை மீனவர்கள் அண்மையில் 11 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினர் எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து அவர்களைக் கரைக்கு அழைத்துவர முற்பட்டபோது, அவர்கள் கடற்படையினரின் பிடியிலிருந்து தங்களின் படகை விடுவித்துத் தப்பிச் செல்ல முற்பட்டதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் எச்சரிக்கை விடுத்ததுடன், எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் அவர்கள் தொடர்ந்தும் தப்பிச்செல்ல முற்பட்டதால் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குக் கடற்படையினர் முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குழப்ப நிலை ஏற்பட்டதாகவும், தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றதால் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் மீனவர் ஒருவர் காயமடைந்ததாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியின்போது, கடற்படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் குச்சவெளியில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், பலரும் இதற்குக் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
Tags:
srilanka
