ஈரானுக்கு எதிராக தாக்குதல்? – இரகசிய ஆயத்தம் மேற்கொள்ளும் அமெரிக்கா!


ஈரான் மீது எதிர்வரும் நாட்களில் தாக்குதல் நடத்தும் வகையில், அமெரிக்கா தீவிர ஆயத்தங்களில் இறங்கியுள்ளது என ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத மூத்த அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான உள்கட்டமைப்பு தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், அமெரிக்கா நேரடியாக தெஹ்ரானுடன் மோதும் சூழ்நிலை உருவாகி வருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை என்றும், நிலைமை தாறுமாறாக மாறக்கூடியது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சிலர், "இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது" எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், கூட்டாட்சி அரசின் பல முக்கிய முகமைகளில் உள்ள உயர் மட்ட அதிகாரிகள் இத்தாக்குதலுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாகவும், ராணுவ வசதிகள் மற்றும் ஆதரவு அமைப்புகள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கைகள், இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாட்டை நோக்கி நகர்த்தும் சாத்தியத்தை வலுப்படுத்துகின்றன.

இவ்வாறான தகவல்கள் வெளிவந்துள்ளதாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாகாத நிலையில், உலக நாடுகள் எதிர்பார்ப்பு மற்றும் பதற்றத்துடன் நிலையை கண்காணித்து வருகின்றன.