தலைக்கவசத்துடன் நடமாடும் நபர்களை சோதிக்கக் கட்டளை!



தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை – பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

மோட்டார் சைக்கிளில் பயணிக்காமல் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்களை சோதனை செய்ய வேண்டும் என அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் இருவரும் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், சைக்கிளின்றி வீதிகளில் தலைக்கவசத்துடன் நடமாடுவது பல சந்தேகங்களுக்கு இடமளிக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இது போன்று சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்பவர்கள் மீதான கண்காணிப்பை அதிகரிக்குமாறும், அவர்கள் உடமைகள் மற்றும் சுமக்கும் பொருட்கள் அனைத்தையும் ஆய்வு செய்யுமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, கடந்த காலங்களில் தலைக்கவசத்தை பயன்படுத்தி முகத்தை மறைத்து குற்றங்களில் ஈடுபட்ட சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.