AI மூலம் 3 மாணவிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய சம்பவம் : கைதான அதிபர் மற்றும் மாணவனுக்கு பிணை!


நிக்கவெரட்டி பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் மாணவன் மற்றும் அதிபர், மூன்று மாணவிகளின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாண படங்களாக மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நிக்கவெரட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இரு சந்தேகநபர்களையும் தலா ஒரு லட்சம் ரூபா பண பிணை மற்றும் தலா பத்து லட்சம் ரூபா உத்தரவாத பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது. 

உத்தரவாதம் வழங்குபவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும், சந்தேகநபர்கள் அக்டோபர் 23 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது

நிக்கவெரட்டிய காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்தச் சம்பவத்தை மறைத்து, அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் உதவியதாக பாடசாலை அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விசாரணைகளில், 14 மற்றும் 15 வயதுடைய மாணவிகளின் புகைப்படங்கள் AI கருவிகளைப் பயன்படுத்தி நிர்வாணப் படங்களாக மாற்றப்பட்டு, மாணவனின் கைப்பேசியில் சேமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர், அந்த கைப்பேசி அதிபரின் வசம் இருந்தது. ஆனால், அவர் இந்த விவகாரத்தை ஒரு மாதத்திற்கும் மேலாக காவல்துறையிடம் தெரிவிக்காமல் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

பாடசாலையின் முன்னாள் மாணவர் சங்கத்தின் புகாரை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, காவல்துறை விசாரணையை மேற்கொண்டது. 

சந்தேகநபர்கள் மீது இலங்கை தண்டனைச் சட்டத்தின் 286, 346 மற்றும் 361 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய செயல்கள் இலங்கை சட்டத்தின் கீழ் கணினிக் குற்றங்களாக கருதப்படுவதாகவும், காவல்துறையின் இணையக் குற்றப் பிரிவு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.